மன்னன் ஒருவன் தனது அரச பதவியை இழந்து அதை மீண்டும் பெற வேண்டி இத்தலத்திற்கு வந்து வேண்டினான். 'பூஜைக்கு வைக்கப்பட்டுள்ள நீர்த்தொட்டியை காவிரி நீரால் நிரப்பினால் மணிமுடி திரும்பக் கிடைக்கும்' என்று அசரீரி கேட்டது. அரசனும் அவ்வாறே காவிரி நீரை மலை மேல் எடுத்து வந்து நிரப்ப முயன்றும் தொட்டி நிரம்பவில்லை. அதனால் மனம் வருந்திய அரசன் தன்னை மாய்த்துக் கொள்ள தனது உடைவாளை வீசினான். அந்த வாள் இறைவன் அருளால் மேலேயே மறைந்து காட்சி தந்து அருளினார். அவனுக்கு இரத்தினங்கள் பதித்த மணிமுடியையும் அளித்தார். உடைவாள் மேலே மறைந்து விட்டதால் இத்தலம் 'வாட்போக்கி' என்றும், அரசனுக்கு இரத்தினங்கள் அளித்ததால் 'இரத்தினகிரி' என்றும் அழைக்கப்படுகிறது. அதனால் இத்தலத்து மூலவர் 'இரத்தினகிரீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் 'இரத்தினகிரீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், உயர்ந்த பாணத்துடன், லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். இறைவன் மீது வாள் பட்ட தழும்பு உள்ளதால் 'முடித்தழும்பர்' என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள் 'சுரும்பார் குழலம்மை' எனும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்யர், பைரவர், நவக்கிரகங்க சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் சூரிய, சந்திரர்கள் தமது மனைவியருடன் காட்சி அளிக்கின்றனர்.
'காலைக் கடம்பர், மதியம் சொக்கர், அந்தி ஈங்கோய்' என்னும் முதுமொழிப்படி, மதியம் வந்து வழிபட வேண்டிய தலம் இது. காலையில் குளித்தலையிலும், மாலையில் ஈங்கோய் மலையிலும் வழிபட வேண்டும்.
ஆயர் ஒருவர் இறைவனின் அபிஷேகத்திற்கு கொண்டு வந்த பாலை கவிழ்த்து விட்டதால் அக்காகம் எரிந்து போனது. அதனால் அன்று முதல் இந்த மலையில் காகம் பறப்பதில்லை. அதனால் இம்மலைக்கு 'காகம் பறவா மலை' என்ற பெயர் ஏற்பட்டது.
வைரப் பெருமாள் என்ற ஆயர்குல பக்தர் ஒருவர் தம் பிரார்த்தனை நிறைவேறியதற்காக தன்னையே பலி கொடுத்தார். அவரே இங்கு காவல் தெய்வமாக, மலையைப் பாதுகாத்து வருவதாக ஐதீகம். அவரது உருவச்சிலை மலை மீதும், மலையின் கீழேயும் உள்ளது. கருப்பண்ண சுவாமி சன்னதியும் உள்ளது.
மலைக்கோயில். மேலே செல்வதற்கு 1017 படிகள் உள்ளன. தினமும் காவிரி நதியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த பால் தயிராக மாறுவது இன்றும் நிகழக்கூடிய அதிசயம். 12 வருடங்களுக்கு ஒருமுறை இங்கு இடி பூஜை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
துர்க்கை, இந்திரன், சூரியன், அகத்திய முனிவர், ஆதிசேஷன், சப்த கன்னியர், வீரசேன மன்னன் ஆகியோர் வழிபட்ட தலம். சித்திரை மாதம் திருவிழா நடைபெறுகிறது. தைப்பூசம், பங்குனி மாதம் தெப்பத் திருவிழா, கார்த்திகை சோமவாரம் போன்றவையும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
|